கொலை வழக்கில் கைதான வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
நாகர்கோவிலில் ஹோட்டல் ஊழியரை தாக்கி கொன்ற இளைஞரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி ராமவர்மன் புதுத் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (23). சம்பவத்தன்று இரவு இவர் தனது நண்பருடன் அப்டா மார்க்கெட் அருகில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். சாப்பிட்டு முடித்ததும் கூகுள் பே மூலம் பணம் அனுப்புவதாக கூறினார்.
இதில் ஏற்பட்ட தகராறில் ஹோட்டல் ஊழியர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ஷேக் மைதீன் (47)என்பவரை தாக்கினார். இதில் ஷேக் மைதீன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, ஆறுமுகம் உட்பட 4 பேரை கைது செய்தனர்.
இதில் ஆறுமுகத்தின் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடுமாறு எஸ்பி சுந்தரவதனம் கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதை ஏற்று ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பேரில் கோட்டார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் நாகர்கோவில் சிறையில் இருந்து ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.