ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை: நாமக்கல்லில் ரூ.2.85 லட்சம் அபராதம் வசூல்..!
கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததையடுத்து 67 ஆம்னி பேருந்துகளுக்கு 2.85 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
By : King Editorial 24x7
Update: 2023-10-21 14:30 GMT
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறையை காரணம்காட்டி, நாமக்கல் மாவட்டத்தில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, அதிக அளவில் பயணிகளை ஏற்றி செல்லுவது என சுமார் 67 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு சுமார் 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உரிய சாலை வரி செலுத்தப்படாமலும், அனுமதிச்சீட்டு பெறாமலும் குறைபாடுகளுடன் இயக்கப்பட்ட 4 ஆம்னிப் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பேருந்துகளுக்கு பதிலாக பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெறும் எனவும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.