ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு 2 இடங்களில் பெயர் பலகை
குமரி மாவட்டம்,திருவட்டார் தாலுகா உருவாக்கப்பட்டு தற்காலிக கட்டிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயல்பட்டு வந்தநிலையில் செருப்பாலூரில் புதிய தாலுகா அலுவலகம் திறக்கப்பட்டும் பழைய கட்டிடத்தில் பெயர்பலகை அகற்றப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்
குமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவை இரண்டாகப் பிரித்து திருவட்டார் தாலுகா கடந்த 2019 ம் வருடம் பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரூ. 3.05 கோடி மதிப்பீட்டில் செருப்பாலூர் பொதுப்பணித்துறை வளாகத்தில் 2 ஏக்கர் பரப்பில் புதிய தாலுகா அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் கடந்த நவம்பர் 20 ம் தேதி திறந்து வைத்தார் .
இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக திருவட்டார் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் திருவட்டார் தாலுகா அலுவலகம் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. ஆனால் செருப்பாலூரில் புதிய தாலுகா அலுவலகம் திறக்கப்பட்ட பின்னரும், ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயில் முன்பு வைக்கப் பட்ட"திருவட்டார் வட்டாட்சியர் அலுவலகம் " என்ற பெயர் பலகை இங்கு இப்போதும் காணப்படுகிறது. தாலுகா அலுவலகம் செருப்பாலூருக்கு மாற்றப்பட்ட பின்னரும் தினமும் ஏராளமான பொதுமக்கள் திருவட்டாருக்கு வந்து ஏமாற்றமடைந்து, பின்னர் தங்கள் வேலைகளை முடிக்க செருப்பாலூரில் உள்ள அலுவலகத்துக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று செருப்பாலூரில் தாலுகா அலுவலக பஸ் நிறுத்தம் அருகில் "திருவட்டார் தாலுகா அலுவலகம் என்ற பெயர் பலகையை புதிதாக அமைத்தனர். தற்போது திருவட்டாரிலும், செருப்பாலூரிலும் தாலுகா அலுவலகம் என்ற பெயர் பலகை காணப்படுகிறது. இது பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என பலரும் கருத்து தெரிவித்தனர்.