போதை மாத்திரை, கஞ்சா கடத்தல் - வாலிபர் கைது
ஜோலார்பேட்டை பேருந்து நிலையம் அருகே ரூ.2.50 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் 4 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த வாலிபரை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பேருந்து நிலையம் அருகே கஞ்சா கடத்தி வருவதாக மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான காவலர்கள் சிவக்குமார் ரங்கநாதன் ராஜேஷ் பாபு கண்ணன் ராமச்சந்திரன் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழு ஜோலார்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஜோலார்பேட்டை பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வாலிபரை மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் அவரிடம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 கிலோ கஞ்சா மற்றும் சுமார் 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 47 அட்டை போதை மாத்திரைகள் இருப்பதை கண்டறிந்து அதை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் டெல்லி பகுதியை சேர்ந்த குமரேசன் மகன் மார்ட்டின் (25) என்பதும் இவர் தற்சமயம் சேலத்தில் உள்ள சித்தப்பா வீட்டில் தங்கி இருக்கும் நிலையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பின்பு கடத்தல் வாலிபரை கைது செய்த மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் பறிமுதல் செய்த போதை பொருட்களையும் வாலிபரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.