ராசிபுரம் ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா
நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கோயில்களும் நவராத்திரி குழு விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியுள்ளது. சரஸ்வதி பூஜைக்கு முன்பாக 9 நாட்கள் பெண்கள் விரதம் மேற்கொள்ளும் நவராத்திரி விழா, அனைத்து கோவில்களிலும், வீடுகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி ராசிபுரம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் கட்டளை தொடங்கியது. இக்கட்டளை ராசிபுரம் கௌரவ பலிஜா நாயுடுகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீதேவி பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டு வெள்ளி காப்பு அலங்காரத்துடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.
மேலும் நவராத்திரி சுவாமி உற்சவர் ஊஞ்சல் சேவையில் பெண் குழந்தைகளை அம்மனாகப் பாவித்து சந்தனம், குங்குமம் பூசி பெண்கள் குழந்தைகளிடம் ஆசிர்வாதம் வாங்கினர்.
இதனைத் தொடர்ந்து பெண்கள் அனைவருக்கும் வெற்றிலை மற்றும் வளையல்கள் வழங்கப்பட்டது.
பக்தர்கள் அனைவருக்கும் கட்டளைதாரர்கள் அன்னதானம் வழங்கினர்.