நெல்லை- திருச்செந்தூர் நேரடி போக்குவரத்து துவக்கம்
திருச்செந்தூர்-நெல்லை சாலையில் 9 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் நேரடி பஸ்போக்குவரத்து தொடங்கியது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திருச்செந்தூர்-நெல்லை சாலையில் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கருங்குளம்-புளியங்குளம், ஆழ்வார்திருநகரி, கேம்பலாபாத், மணத்தி பகுதிகளில் பல அடி உயரத்துக்கு சாலையை கடந்த வெள்ளநீர் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது.
இதனால் கடந்த 17-ந் தேதி முதல் திருச்செந்தூர்-நெல்லை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆற்றில் வெள்ளம் வற்றிய நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கருங்குளம்-புளியங்குளம் இடையே சாலையில் தண்ணீர் வற்றியது. இதை தொடர்ந்து திருச்செந்தூர்-நெல்லை இடையே மாற்று வழியில் போக்குவரத்து நடந்தது.
அதாவது திருச்செந்தூர், குரும்பூர், நாலுமாவடி, பிரகாசபுரம், மூக்குப்பீறி, நாசரேத் சுற்றி ஆழ்வார்திருநகரி வந்து, அங்கிருந்து புதுக்குடி, செய்துங்கநல்லூர் மார்க்கமாக நெல்லைக்கு வாகனங்கள் சென்று வந்தன. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். ஆழ்வார்திருநகரி-கேம்பலாபாத் பகுதியில் சாலையின் குறுக்கே ஓடிய வெள்ள தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, சேதமடைந்த சாலையும் சீரமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து பகல் 12 மணி முதல் நெல்லை-திருச்செந்தூர் சாலையில் இருமார்க்கத்திலும் நேரடி போக்குவரத்து தொடங்கியது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.