புதிய உழவர் சந்தை திறப்பு
கரூர், காந்திகிராமத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் புதிய உழவர் சந்தை திறப்பு விழா நடந்தது.
கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் பகுதியில், கரூர் மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் புதிய உழவர் சந்தை- உங்கள் சந்தை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் இந்த விழாவில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து, உழவர் சந்தையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், மண்டல தலைவர் கோல்டு ஸ்பாட் ராஜா, மாநகராட்சி வடக்கு நகர் செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணி, உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், வேளாண்மை துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்வதற்கான அடையாள அட்டையும், அனுமதியும் இலவசமாக வழங்கப்படுகிறது. இங்கு கடை நடத்துவதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இடைத்தரகர்கள் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால் மிகக் குறைந்த விலையில் விவசாயிகளால் விளைவிக்கப்படும் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. பொருட்களை பெறும் பொது மக்களுக்கும் சரியான எடையில், குறைந்த விலையில் கிடைப்பதால், பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாட்டினை வேளாண்மை துணை இயக்குனர் மற்றும் வேளாண் வணிகம் துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.