தீயணைப்பு நிலையத்துக்கு ரூ.75 லட்சத்தில் புதிய நவீன கருவிகள்
பேரிடர் மீட்புப் பணிகளை விரைந்து செயல்படுத்தும் வகையில், தஞ்சாவூர் தீயணைப்பு நிலையத்துக்கு ரூ.75 லட்சத்தில் புதிய நவீன கருவிகள் கொண்ட வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில், விபத்து மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளை துரிதமாக செயல்படுத்த, ரூ.75 லட்சம் மதிப்பிலான புதிய நவீன கருவிகள் கொண்ட வாகனம் தஞ்சாவூர் மாவட்ட தீயணைப்பு நிலையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு நவீன கருவிகள் கையாளுவது குறித்து இரு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்பட 9 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையங்களில் தீயை அணைக்ககூடிய வாகனங்கள், மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படக்கூடிய கருவிகள் ஆகியவை உள்ளன. இந்நிலையில் பேரிடர் மீட்பு மற்றும் விபத்துகளில் சிக்கியவர்களை விரைந்து மீட்கும் வகையில் அதற்கேற்ற பிரத்தியேக வாகனம் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்டது. அதில், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு ஒரு வாகனம் வழங்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை அந்த வாகனம், தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள மாவட்ட தீயணைப்பு நிலையத்துக்கு வந்தது. இந்த வாகனத்தில் உள்ள அதிநவீனப் பொருட்களின் செயல்பாடுகளை தீயணைப்பு வீரர்கள் அனைவரும் தெரிந்து கொண்டு செயல்படுத்தும் விதமாக, செவ்வாயன்று மாவட்டம் முழுவதும் உள்ள 80 தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று (மார்ச் 6ம் தேதி) மீதமுள்ள 70 தீயணைப்பு வீரர்களுக்கு இந்த செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. செயல்விளக்கப் பயிற்சியை தீயணைப்பு மீட்புப்பணிகள் நிலைய மாவட்ட அலுவலர் ச.குமார் தொடங்கி வைத்து, செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசால் தஞ்சாவூர் தீயணைப்பு மீட்புப்பணிகள் நிலையத்துக்கு ரூ.75 லட்சம் மதிப்பிலான அவசரகால மீட்பு ஊர்தி வழங்கப்பட்டுள்ளது. இவ் ஊர்தியில் உயிர் மீட்பு பணிக்கான மோட்டாருடன் கூடிய இரப்பர் படகு, ஆழ்கடல் உயிர் மீட்பு பணிக்கான நீச்சல் உடைகள், 40 டன் வரை எடையுள்ள பொருட்களை எளிதில் தூக்க கூடிய ஏர் லிஃப்டிங் பேக், நீட்டிப்பு ஏணி, புகை வெளியேற்றி, கான்கிரீட் கட்டர் மற்றும் காம்பி டூல், புகை சூழ்ந்த இடங்களில் புகையினை வெளியேற்ற மூச்சுக் கருவி, எலக்ட்ரிகல் பவர் சா, பெட்ரோல் பவர் சா, தீ பாதுகாப்பு உடைகள், ஜெனரேட்டர், தானியங்கி உயர் கோபுர மின் விளக்குகள், லைஃப் ஜாக்கெட் மற்றும் சிறிய ரக தீயணைப்பான்கள், 20 டன் எடையினை எளிதில் தூக்கக் கூடிய கேபிள் வின்ச்சுடன் கூடிய மோட்டார் அமைப்பு உள்ளிட்ட 54 வகையிலான மீட்பு பணி உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில், உள்ள அனைத்து தீயணைப்பு வீரர்களுக்கு இந்த கருவிகளை பயன்படுத்துவது தொடர்பாக இருநாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் வாகன விபத்துகள், கட்டிட விபத்துகள், நீரில் மூழ்கியவர்களை தேடுதல், தீயணைப்பு நேரங்களில் பாதுகாக்க கூடிய வகையில் விரைந்து செயல்பட இந்த நவீன கருவிகள் கொண்ட ஊர்தி பெரிதும் பயன்படுத்தப்படும்" என்றார். பயிற்சியின் போது உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் கோ.கணேசன், பா.முருகேசன் மற்றும் நிலைய அலுவலர்கள் வி.செல்வராஜ், நா.மாறன், கி.பாலசுப்பிரமணியன், ரெ.செல்வம், சி.அனந்தசயனன், கோ.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.