மல்லசமுத்திரம் வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் கீழ் ராமாபுரம் கிராமத்தில் பயறுவகை பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளியின் வயல்தினவிழா வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் யுவராஜ் தலைமையில் கடந்த மே மாதம் முதல் தேவராஜ் என்ற விவசாயியின் வயலில் நடந்து வருகின்றது. வம்பன் 4 பாசிப்பயறு ரகம் பயிரிடப்பட்ட இப்பண்ணைப்பள்ளியானது, விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்களும் வகுப்புகளாக விவசாயிகளுக்கு நேற்று, நேரடியாக செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. வயல்தின விழாவில் டி.ஏ.பி., தெளிப்பு, பயறு ஒண்டர் தெளிக்கப்பட்ட பாசிப்பயறு வயல்களில் தனித்தனியாக அறுவடை மேற்கொண்டு ஒப்பீடு செய்யப்பட்டது. முடிவில் சாதாரண வயலுடன் ஒப்பிடுகையில் பயறு ஒண்டர் தெளிக்கப்பட்ட வயலில் 25% கூடுதல் மகசூல் விளைச்சலும், டி.ஏ.பி., தெளிக்கப்பட்ட வயலில் 15% கூடுதல் விளைச்சலும் கண்டறியப்பட்டது. இப்பண்ணைப்பள்ளி வகுப்பில் 25 விவசாயிகள் தொடர்ந்து கலந்துகொண்டனர். பயிற்சியின் முடிவில் வேளாண்மை அலுவலர் சிரஞ்சீவி நன்றியுரை கூறினார். உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.