வழக்குப்பதிவு
இரு தரப்பினர் மோதிக்கொண்ட விவகாரம் நாம் தமிழர் கட்சி - தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் 9 பேர் மீது வழக்கு பதிவு;
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதை ஒட்டி தி.மு.க-நாம் தமிழர் கட்சியினர் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி கட்சியினருடன் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்துவ தேவாலயம் முன்பாக, நேற்று பிரார்த்தனை நடத்தி விட்டு வெளியே வரும் கிறிஸ்துவ மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அதே பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சீமானுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கினர், இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது, ஆனால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். போலீசார் சமாதானப்படுத்தி வைத்தனர். சீமானுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வழங்கி வந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை நாம் தமிழர் கட்சியினர் சென்று தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து, ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கொலை மிரட்டல் விடுத்தல், கெட்ட வார்த்தைகள் பேசுதல், கையால் அடித்தல் உட்பட 143 பிரிவு உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அதேபோல தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த ஜாபர் கொடுத்த புகாரின் பேரில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பவனம் கார்த்தி, பெஞ்சமின், சாலமன், வஹாப் உள்ளிட்ட 4 பேர் மீது அதே மூன்று பிரிவுகளின் கீழ் ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.