சேலம் எருமாபாளையம் குதிரைபாலிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மகன் குமார் (வயது 19). இவருடைய அக்காளை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏரிக்கரை ரோட்டை சேர்ந்த சூர்யா (20) என்பவர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குமார், சூர்யாவிடம் தட்டிக்கேட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று குமார் குதிரைபாலிக்காடு பகுதியில் நடந்து சென்ற போது அங்கு வந்த சூர்யா, அவருடைய நண்பர்களான வினோ (26), கீர்த்திவாசன் (21) ஆகியோர் குமாரை வழிமறித்து பீர்பாட்டிலால் தாக்கியதாகவும், தடுக்க வந்த குமாரின் உறவினர் மணிகண்டன் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மோதல் குறித்து இரு தரப்பினரும் கிச்சிப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி சூர்யா, வினோ, மணிகண்டன், கீர்த்திவாசன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன், சூர்யா, வினோ, மணிகண்டன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.