கொலை

கட்டிட மேஸ்திரி கல்லால் அடித்து கொலை நண்பர்கள் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை;

Update: 2025-03-19 03:43 GMT
ஈரோடு மாவட்டம் சென்னிமலை வார சந்தைக்குள் உள்ள காய்கறி விற்பனை மேடையில் ஆண் பிணம் கிடப்பதாக நேற்று காலை சென்னிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் வார சந்தைக்குள் சென்று பார்த்த போது அங்கு தலையில் ரத்த காயங்களுடன் ஆண் ஒருவர் இறந்த கிடந்தார். இறந்த நபரின் உடல் அருகே இரண்டு பெரிய கற்களும் கிடந்தன. எனவே அவர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. போலீசாரின் விசாரணையில் இறந்த நபர் குறித்த தகவல் தெரிய வந்தது.கொலை செய்யப்பட்டவர் சென்னிமலை, ஈங்கூர் ரோட்டில் உள்ள திருநகர் காலனியைச் சேர்ந்த கணேசன் (48). கட்டிட மேஸ்திரி ஆக வேலை பார்த்து வந்தார். மேலும் இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னிமலை அரச்சலூர் ரோட்டில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் கணேசன் மது குடிக்க சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் தான் அவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்,பெருந்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுல கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். ஈரோட்டில் இருந்து போலீஸ் மோப்பநாய் காவேரி வரவழைக்கப்பட்டது. அது சிறு தூரம் ஓடியது. யாரையும் கண்டுபிடிக்கவில்லை. பின்னர் கணேசன் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குடிபோதையில் நண்பர்களுக்கு ஏற்பட்ட தகராறில் கணேசன் படுகொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் பெருந்துறை துணை கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில் சென்னிமலை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கொலையுண்ட கணேசனின் நண்பர்கள் இரண்டு பேரை சென்னிமலை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில்தான் கணேசன் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News