பரபரப்பு
திம்பம் அருகே குட்டியுடன் காரைத் துரத்திய காட்டு யானைகளால் பரபரப்பு;

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான் உட்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீபகாலமாக உணவு தண்ணீரை தேடி அடர்ந்த வனப் பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உலா வருவதும், கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் திம்பம் அடுத்த செம்மண் திட்டு என்ற இடத்தில் இரவில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது செம்மண் திட்டு பகுதியில் குட்டியுடன் இரண்டு யானைகள் சாலையில் நின்ற கொண்டு இருந்தன. அப்போது அந்த கார் ஓட்டுநர் அந்த யானை கூட்டத்தை கடந்து சென்று விடலாம் என்று தனது காரை இயக்கி உள்ளார். திடீரென குட்டியுடன் நின்று கொண்டு இருந்த இரண்டு யானைகளும் அந்தக் காரை துரத்த ஆரம்பித்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுநர் காரை வேகமாக இயக்கி அங்கிருந்து கடந்து சென்றார். பின்னர் சிறிது நேரம் சாலையில் உலா வந்த யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டன.