இருப்பு விதைகளை பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்
தென்மேற்கு பருவமழை காலத்திற்காக இருப்பு வைத்துள்ள விதைகளை நீலகிரி மாவட்ட விவசாயிகள் மற்றும் விதை வினியோகஸ்தர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்று விதை பரிசோதனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். அப்போது மலைக் காய்கறிகள் சாகுபடி செய்ய விவசாயிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை காலத்திற்காக விதைகளை இருப்பு வைத்துள்ள நீலகிரி மாவட்ட விவசாயிகள் மற்றும் விதை வினியோகஸ்தர்கள் ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள தோட்டக்கலை துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் விதை பரிசோதனை செய்து கொள்ள விதை பரிசோதனை அலுவலர் நவீன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வீட்டில் உள்ள செய்தி குறிப்பில் குறப்பிடப்பட்டுள்ளதாவது:- நீலகிரி மாவட்டம் ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள விதைப்பரிசோதனை நிலையத்தில், நீலகிரி மாவட்ட விவசாயிகள் பணிவிதை மாதிரியை கொடுத்து விதைப்பரிசோதனை செய்து கொள்ளல்லாம். இந்த நிலையத்தில் விதையின் தர நிர்ணய காரணிகளான முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் போன்றவை பரிசோதனை செய்யப்படுகின்றன.
ஒரு விதை மாதிரிக்கு ரூ. 80/- மட்டுமே பரிசோதனைக் கட்டணமாக செலுத்தி பயிர் மற்றும் ரகம், குவியல் எண் ஆகியவை குறித்த விபரச் சீட்டுகளை கொடுத்து, விதையின் தரத்தை அறிந்து கொள்ளலாம். விதைப்பரிசோதனைக்கு சமர்ப்பிக்க வேண்டிய பிரதான காய்கறிகளுக்கான விதை மாதிரியாக, கேரட், காலிப்ளவர் மற்றும் முட்டைகோஸ் 10 கிராம், பீட்ரூட் மற்றும் முள்ளங்கி 50 கிராம், பீன்ஸ் 450 கிராம், பட்டாணி 250 கிராம், பாலக்கீரை 25 கிராம், ப்ரொக்கோலி, நூல்கோல் மற்றும் டர்நீப் 10 கிராம் ஆகும். இவ்வாறு பயிருக்கேற்ப குறைந்தபட்ச விதை மாதிரியை பரிசோதனை செய்து விதையின் தரத்தை அறிந்து விதைப்பதன் மூலம் தரமற்ற விதையினால் ஏற்படும் தேவையற்ற செலவுகளை தவிர்த்து கொள்ளலாம். மேலும் தரமான விதையின் மூலம் சாகுபடி அதிகரிக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.