கெங்கவல்லி ஒன்றிய சேர்மன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்
கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில், மொத்தமுள்ள 11 பேரில், 9 பேர் எதிராக வாக்களித்தனர். இதனால் அவரது பதவி பறிபோகிறது.
.கெங்கவல்லி ஊராட்சிஒன்றியத்தில் 11 உறுப்பினர்கள் உள்ளனர். ஒன்றிய குழு தலைவராக பிரியாவும், துணை தலைவராக விஜேந்திரனும் உள்ளனர். இந்த நிலையில், ஒன்றிய குழு துணை தலைவர் விஜேந்திரன் தலைமையில், உறுப்பினர்கள் 9 பேர் கையொப்பமிட்டு, தலைவர் பிரியா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை, சேலம் கலெக்டர் கார்மேகத்திடம் மனுவாக வழங்கினர்.
இந்நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில், கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தில், ஆத்தூர் ஆர்டிஓ ரமேஷ் தலைமையில், ஒன்றிய குழு தலைவர் பிரியா மீதான நம்பிக்கையில்லாத தீர்மானம் நடை பெற்றது. மொத்தமுள்ள 11 உறுப்பினர்களில் ஒருவர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தலைவர் உள்பட 10 பேர் கலந்து கொண்டனர். இதில் திமுகவை சேர்ந்த சுசிலா, முருகேசன். விஜயேந்திரன், கோமதி, கார்த்திக், அதிமுக உமாராணி, தனலட்சுமி, சாமிநாதன், கீதா உள்ளிட்ட 9 பேர் குரல் வாக்கெடுப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் முழுவதுமாக வீடியோபதிவு செய்யப்பட்டது. இது கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆர்டிஓ தெரிவித்தார்.
மொத்தம் உள்ள 11 உறுப்பினர்களில் 9 பேர் எதிராக வாக்களித்ததன் மூலம், தலைவர் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பதட்டம் நிலவியதால், கெங்கவல்லி இன்ஸ்பெக்டர்(பொ) கமலக்கண்ணன் தலைமையில், எஸ்ஐ அந்தோணி மைக்கேல், நிர்மலா, மணிவேல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஆணையாளர் பரமசிவம், கிராம ஊராட்சி ஆணையாளர் தாமரைச்செல்வி, தாசில்தார் (பொ) அன்புசெழியன், ஆர்டிஓ நேர்முக உதவியாளர் சிராஜூதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.