அரசு ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது : ஆட்சியர் உத்தரவு
போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதால் தூத்துக்குடி மாவட்ட அரசு அலுவலர்கள் / பணியாளர்களுக்கு விடுமுறை கிடையாது என ஆட்சியா் கோ.லட்சுமிபதி, உத்தரவு
By : King 24x7 Website
Update: 2023-12-23 17:45 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் மாவட்டத்தில் பணியாற்றும் வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, வேளாண்மைத்துறை, கால்நடை மற்றும் மீனவர் நலத்துறை, சுகாதாரத் துறை, மின்சாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சித் துறை மற்றும் அனைத்துத் துறை அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்துத் துறை பணியாளர்களும் தற்போது களப் பணியாற்ற வேண்டிய முக்கியமான சூழ்நிலையில் தங்களுடைய அலுவலகத்தில் உடனே ஆஜராகி சுணக்கமின்றி பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மாவட்ட தலைமை அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் ஆஜராகவும் அறிவுறுத்துப்படுகிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும், அனைத்துத் துறை பணியாளர்களும் உடனே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராகி தங்கள் தலைமை அலுவலர்களிடம் அறிக்கை செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளும், கணக்கெடுப்பு பணிகளும், சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருவதால் அரசு விடுமுறை நாட்கள் தூத்துக்குடி மாவட்ட அரசு அலுவலர்கள் / பணியாளர்களுக்கு பொருந்தாது எனவும், இந்த சீரிய பணியில் அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.