பூந்தமல்லியில் பராமரிப்பு இல்லாத நகராட்சி பூங்கா.

பூந்தமல்லியில் உள்ள பல பூங்காக்கள் முறையான பராமரிப்பு இன்றியும், விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்தும், விஷ புச்சிகள் குடியிருக்கும் இடமாகவும் மாறி வருகிறது.

Update: 2024-02-06 10:37 GMT

பூந்தமல்லியில் உள்ள பல பூங்காக்கள் முறையான பராமரிப்பு இன்றியும், விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்தும், விஷ புச்சிகள் குடியிருக்கும் இடமாகவும் மாறி வருகிறது.

பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் 21-வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பல பூங்காக்கள் முறையான பராமரிப்பு இன்றியும், விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் பழுதடைந்தும், புதர் மண்டியும், விஷ புச்சிகள் குடியிருக்கும் இடமாகவும் மாறி வருகிறது. குறிப்பாக பூந்தமல்லி நண்பர்கள் நகரில் உள்ள நகராட்சி பூங்கா பொது மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

இந்த பூங்காவுக்கு தினந்தோறும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளவும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் வந்து செல்கிறார்கள். ஆனால் இங்கு ராட்டினம், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்ட குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் அனைத்தும் உடைந்து கிடக்கின்றன. இதனை குழந்தைகள் ஏக்கத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

மேலும் ஏற்கனவே இருந்த குடிநீர், கழிப்பறை வசதிகள் அனைத்தும் இப்போது இல்லை. கழிவறைகள் உடைந்தும், குடிநீர் குழாய் துருபிடித்தும் காணப்படுகிறது. பூங்காவை சுற்றி நடந்து செல்லும் பாதையும் பல இடங்களில் இடிந்து கிடப்பதால் அதில் செல்லும் வயதானவர்கள் அடிக்கடி தடுமாறி விழும் நிலையும் நீடித்து வருகிறது. எனவே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் நண்பர்கள் நகரில் உள்ள நகராட்சி பூங்காவை முறையாக பராமரித்து குழந்தைகள் விளையாட்டு சாதனங்களை புதிதாக அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News