காங்கிரஸில் பெண்களுக்கு மரியாதை இல்லை - விஜயதரணி பேட்டி

காங்கிரஸில் பெண்களுக்கு மரியாதை இல்லை இதை அனுபவமாக நான் உணர்ந்தேன் என முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி கூறினார்.

Update: 2024-03-13 12:09 GMT
நாகர்கோவில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று பேட்டியளித்த விஜயதரணி

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தார். அதன் பிறகு இன்று முதன் முறையாக குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பளித்தனர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-     காங்கிரஸில் பெண்களுக்கு மரியாதை இல்லை இதை அனுபவமாக நான் உணர்ந்தேன். சட்டமன்றத்தில் கூட பெண்களுக்கு முன் வரிசையில் இடம் அளிக்காத கட்சி காங்கிரஸ் கட்சியாகும். நிறைய பெண்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி வருகிறார்கள். பாரதிய ஜனதாவில் எனக்கு பதவி கண்டிப்பாக கொடுப்பார்கள். விரைவில் அங்கீகாரம் கொடுப்பார்கள். அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.        

பாதிய ஜனதாவில்  பெண்களுக்கு எந்த சீட் கொடுத்தாலும் சரி, பதவிகள் கொடுத்தாலும் சரி அதற்கு 2 விஷயங்கள் மையமாக இருக்கும். ஒன்று பெண்களை அங்கீகாரப்படுத்தும், அதிகாரப்படுத்தும் முயற்சியாக இருக்கும். மற்றொன்று பெண்கள் களப்பணி ஆற்றும் களத்தை உருவாக்குவார்கள். அதுதான் பாரதிய ஜனதாவின் சீரிய தன்மை.    

 பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்த நாங்கள் வந்துள்ளோம். எந்த சுயநலமும் இல்லாமல் பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். மக்கள் பணி மட்டுமே பிரதான பணியாக நினைக்கக் கூடியது பாரதிய ஜனதா கட்சி தான். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலும் காங்கிரஸ் சார்பில் வாரிசுகளுக்குத் தான் சீட்டு கொடுத்து இருக்கிறார்கள். அதனால் இந்த மூன்று ஆண்டுகளில் ஏதாவது பணிகள் நடந்திருக்கிறதா? எதுவும் செய்யவில்லை. மீண்டும் மோடி தான் பிரதமராக வரப் போகிறார்.       

தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை தருவதை வரவேற்கிறேன். ஆனால் தாலிக்கு தங்கம் திட்டம் ஜெயலலிதா கொண்டு வந்து காரணத்தால் அதை நிறுத்தி உள்ளார்கள். மகளிர் உரிமை தொகை அனைத்து பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும். மகளிர் உரிமைத்தொகை பிச்சை காசு என்று குஷ்பு கூறி இருப்பதாக கேட்கிறீர்கள். என்ன அர்த்தத்தில் அவர் பேசினார் என்று எனக்கு தெரியவில்லை என்றார்.    

இந்த பேட்டியின் போது எம். ஆர் காந்தி எம் எல் ஏ, மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநிலச் செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News