டென்ஷன் ஆக்கிய அதிகாரிகள் - மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
பட்டுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடக்கும் கட்டடத்தை திறக்க மறுத்த ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை கண்டித்து, நூற்றுக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் எதிரே யூனியன் அலுவலகத்திற்கு சொந்தமான, வட்டார சேவை மையம் கட்டடம் உள்ளது. இங்கு, மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடத்துவதற்காக வசதியாக கட்டடம் மாற்றப்பட்டது. மாதந்தோறும் காலை 9 மணிக்கு முகாம் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பட்டுக்கோட்டை, பேராவூரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், மருத்துவர்கள், மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள் காலை 8 மணிக்கே வந்திருந்தனர். ஆனால், காலை 11 மணியாகியும் கட்டடம் திறக்கப்படவில்லை.
இது தொடர்பாக, மாற்றுத்திறனாளிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் கேட்ட போது, இங்கு முகாம் நடத்த யார் அனுமதி கொடுத்தது. நாங்கள் வரும் போது தான் கட்டடம் திறப்போம் என பேசியுள்ளனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் ஆவேசம் அடைந்து, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பட்டுக்கோட்டை – முத்துப்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் 12 மணிக்கு கட்டடத்தை திறந்து விட்டனர்.
இருப்பினும், ஒவ்வொரு மாதமும், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் முறையாக திறப்பது இல்லை எனக் கூறி மறியல் நடந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சுகுமார், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் மாவட்ட நல அலுவலர் சீனிவாசன், பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதன் பிறகு முகாம் துவங்கி நடைபெற்றது. இதனால் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.