தடை செய்யப்பட்ட நெகிழிப் பை ஆலைக்கு அதிகாரிகள் 'சீல்'
திண்டுக்கல் அருகே செயல்பட்டு வந்த தடை செய்யப்பட்ட நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 'சீல்' வைத்தனா்.
Update: 2024-05-08 09:58 GMT
திண்டுக்கல் அருகேயுள்ள சாலையூா் பகுதியில் செயல்பட்டு வந்த மாவு அரைவை ஆலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளா் உதயா, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா் வில்சன் ஆகியோா் தலைமையிலான அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, மாவு அரவை ஆலையின் மின்சாரத்தை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் உற்பத்தி செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த குடோனை பூட்டி அதிகாரிகள் 'சீல்' வைத்தனா். இதே ஆலையில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் உற்பத்தி செய்ததாக, கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபரில் ஆலைக்கான மின்சாரத்தை அதிகாரிகள் துண்டித்தனா். பின்னா், அருகிலுள்ள மாவு அரவை ஆலையிலிருந்து மின்சாரத்தைப் பெற்று, மீண்டும் நெகிழிப் பை உற்பத்தி செய்தது தெரியவந்தது.இதனால் பூட்டி 'சீல்' வைத்ததாக மாசுக்காட்டு வாரிய அலுவலா்கள் தெரிவித்தனா்.