ஏசிஇ அறக்கட்டளை சார்பில், ரூ.4.15 லட்சம் மாணவர்களுக்கு பரிசு
பேராவூரணியில் ஏசிஇ டிரஸ்ட் சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி எம்.எஸ் விழா அரங்கில் ஏசிஇ டிரஸ்ட் சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை தலைவரும், ஓய்வு பெற்ற காவல்துறை துணைக் கண்காணிப்பாளருமான வி.மகேந்திரன் தலைமை வகித்தார். அறக்கட்டளை பொருளாளர் இ.வீ.காந்தி வரவேற்றுப் பேசினார். ஓய்வு பெற்ற வேளாண்மை துறை கூடுதல் இயக்குனர் பி.சிவக்குமார், அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் முன்னாள் செயலாளர் எஸ்.முகமது அஸ்லம், மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் என்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், காவல்துறை தலைவர் ஓய்வு கே.பெரியய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 10 ,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் நீட் தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், மாநில அளவில் உயர்கல்வியில் தங்கப்பதக்கம், விளையாட்டு மற்றும் இதர துறைகளின் சாதனையாளர்களுக்கு ரூபாய் 4 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கிப் பாராட்டிப் பேசினார். நிகழ்ச்சியில், அறக்கட்டளை செயலாளர் என்.இளங்கோ, இணைச் செயலாளர் சி.விஜய்காந்தன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக துணைத்தலைவர் வி.ராமமூர்த்தி நன்றி கூறினார்.