நீலகிரியில் 75 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குப்பதிவு மையம் !

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் குறைந்த வாக்காளர்களை கொண்ட கெத்தை பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-16 10:17 GMT

வாக்குப்பதிவு மையம்

கெத்தை வனப்பகுதியில் உள்ள பெகும்பள்ளா முகாமில் 75 ஓட்டுக்களுக்காக வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகிறது.

ஊட்டி, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் என 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் 6,88,646 ஆண்கள் 7,39,524 பெண்கள், மற்ற பாலினத்தவர் 82 பேர் என மொத்தம் 14,28,252 வாக்காளர்கள் உள்ளனர்.

நீலகிரி தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 1619 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதேபோல் 3 தொகுதிகள் அடங்கிய நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 758 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட இந்த ஆண்டு தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதால் 75 ஓட்டுகள் மட்டும் கொண்ட கெத்தை வனப்பகுதியில் உள்ள பெகும்பள்ளா முகாம் என்ற இடத்தில், தனியாக வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

கெத்தை மின் உற்பத்தி நிலைய ஊழியர்களுக்காக மின்வாரிய குடியிருப்பு முகாம் உள்ளது. இந்த மின்வாரிய ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதற்காக அங்குள்ள பெகும்பள்ளா முகாமில் நடுநிலைப்பள்ளி இருந்தது. இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்ததால் அந்த பள்ளிக்கூடம் மூடப்பட்டு விட்டது. மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருந்த மாணவர்கள் மஞ்சூரில் உள்ள பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

மாணவர் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்ட பள்ளி அங்குள்ள 75 ஓட்டுகளுக்காக தற்போது வாக்குச்சாவடி மையமாக மாற்றப்பட்டுள்ளது. 75 வாக்குகளுக்காக 2 வாக்குப்பதிவு எந்திரங்கள், 4 தேர்தல் அலுவலர்கள், பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸார், கண்காணிப்பு அலுவலர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட உள்ளனர்‌.

வனப்பகுதியில் குறைந்த எண்ணிக்கையில் வாக்காளர்கள் கொண்ட வாக்குப்பதிவு மையமாக இருந்தாலும் அரசியல் கட்சிகள் இல்லாமல், தேர்தல் ஆணையமே போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்தால் 100 சதவீத வாக்கு பதிவை எட்டலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News