ஊட்டி சந்தை கடை மாரியம்மன் கோயில் தேர் திருவிழா!
ஊட்டி சந்தை கடை மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக ஊட்டி சந்தை கடை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு கடந்த மாதம் பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. கணபதி ஹோமம், நவகலச பூஜை, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து பூரதம் புறப்பாடுடன் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது.
இதை தொடர்ந்து 18ம் தேதி முதல் ஏப்ரல் 19ம் தேதி வரை தினமும் மாலை ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஆதிபராசக்தி, துர்க்கை, கொடுங்களூர் அம்மன், ராஜகாளியம்மன், ஹெத்தையம்மன், மகா மாரியம்மன் உள்பட பல்வேறு அலங்காரத்துடன் வாகனங்களில் எழுந்தருளி வருகிறார். இந்த நிலையில் இன்று மலபார் ஈழுவாத்தீயா சமூகத்தினரின் சார்பில் தேரோட்டம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் மேலும் காளி, சிவன் உள்ளிட்ட கடவுள்கள் வேடமணிந்து பக்தர்கள் நடனமாடினர். வருகிற 12ம் தேதி முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சியும், 15ம் தேதி தேர் கலசம் ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான முக்கிய தேரோட்டம் ஏப்ரல் 16ம் தேதி மதியம் 1.55 மணிக்கு நடக்கிறது.
அன்று காலை 6 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், 8 மணிக்கு பட்டு பரிவட்டம் சாத்துப்படி, 8.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு சிறப்பு கனகாபிஷேகம் நடைபெறுகிறது. முன்னதாக தினசரி கோவில் நடை காலை 7 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு சாத்தப்பட உள்ளது.