ஊட்டி நகராட்சி சந்தை ஆட்சியர் அருணா ஆய்வு
நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சி சந்தை கடைகள் கட்டுப் பணிகளை ஆட்சியர் அருணா நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைவுப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்யப்படும் காய்கறிகளை சிறு, குறு விவசாயிகள் ஊட்டி நகராட்சி சந்தையில் உள்ள மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அங்கு மொத்த வியாபாரிகள் ஏலம் எடுத்து வெளியிடங்களுக்கு சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கின்றனர். இங்கு 1500 நிரந்தர கடைகளும் 500 தற்காலிக கடைகளும் உள்ளன. இந்த சந்தைக்கு தினமும் 3,500 முதல் 4000 வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் இந்தசந்தையில் சுமார் 80 கடைகள் வரை சேதமடைந்தன. மே
லும் வாகன நிறுத்தம், பொதுக்கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத ஊட்டி நகராட்சி சந்தையை புதுப்பிக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது . 1500-க்கும் மேற்பட்ட கடைகள் இருப்பதால் 3 கட்டங்களாக இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் மார்க்கெட் புனரமைப்புக்காக முதல் கட்டமாக ரூ. 18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கடைகள் காலி செய்யப்பட்டு இடிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக பழைய கடைகளை இடித்து புது கடைகள் கட்ட ரூ. 18 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக காலி செய்யப்பட்ட கடைகளுக்கு பதிலாக ஏ.டி.சி., பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக கடைகளை இடிப்பதற்காக ஒரு சில நாட்களில் பூமி பூஜை போட உள்ளதாக தகவல் பரவியது. இதற்கு இடையே மாற்றுஏற்பாடு செய்யாமல் இரண்டாம் கட்ட கடைகளை காலி செய்ய சொல்லி வற்புறுத்துவதாக சந்தை வியாபாரிகள் நேற்று கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அருணா ஊட்டி நகராட்சி சந்தையில் பணிகள் நடக்கும் பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது வாகன நிறுத்துமிடம் கடைகள் எந்த வகையில் அமைய உள்ளது என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைவுப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.