சேலம் : மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி திறப்பு

சேலத்தில் ரூ.6.70 கோடியில் செவி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பள்ளியை முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Update: 2024-01-19 02:11 GMT

மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி திறப்பு 

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் ரூ.6.70 கோடி மதிப்பில் செவி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உயர்நிலைப்பள்ளியை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக , சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை 75 ஆயிரத்து 58 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. சேலம் செவ்வாய்பேட்டையில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 53 மாணவ-மாணவிகள் கல்வி படித்து வருகின்றனர்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 8 அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளிகள் தொண்டு நிறுவனங்கள் மூலமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு செவி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உயர்நிலைப்பள்ளி கொண்டப்பநாயக்கன்பட்டியில் ரூ.6 கோடியே 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

இங்கு 100 மாணவ, மாணவிகள் தங்கி படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 45 மாணவ, மாணவிகளுக்கு 8 சிறப்பு ஆசிரியர்கள் மூலம் கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளியை நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., அருள் எம்.எல்.ஏ., சேலம் ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடிராஜா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News