காஸ் பைப் லைன்' பணியால் ஒரகடம் நெடுஞ்சாலையில் அவதி
ஒரகடத்தில், பிரதான நெடுஞ்சாலைகளில் மந்தகதியில் நடந்து வரும் 'காஸ் பைப் லைன்' அமைக்கும் பணியால், நெரிசல் மற்றும் விபத்துகளில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில், பிரதான நெடுஞ்சாலைகளில் மந்தகதியில் நடந்து வரும் 'காஸ் பைப் லைன்' அமைக்கும் பணியால், நெரிசல் மற்றும் விபத்துகளில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். தமிழகத்தில் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது.
அந்த வகையில், ஒரகடம் சுற்றுவட்டார பகுதிகளில், 'காஸ் பைப் லைன்' அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, சாலையோரங்களில் பைப் லைன் போடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், ஒரு மாதத்திற்கு மேலாக மந்தகதியில் நடந்து வரும், பைப் லைன் பணியால், வாகன ஒட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த நெடுஞ்சாலையில், சாலையில் நடுவே தடுப்புகள் வைத்து,
பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சாலையின் அகலம் பாதியாக குறைந்துள்ளது. இதனால், 'பீக் ஹவர்ஸ்' நேரங்களில் நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் நடந்து வருகின்றன. எனவே, 'காஸ் பைல் லைன்' அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.