உடல் உறுப்பு தானம்: பெற்றோருக்கு மாவட்ட ஆட்சியர் ஆறுதல்
தேனி அருகே உடல் உறுப்பு தானம் செய்த அன்புராஜன் பெற்றோருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
தேனி மாவட்டம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்த அனுமந்தன்பட்டியை சேர்ந்த 23 வயது பட்டதாரி இளைஞர் அன்புராஜன் அவர்களின் பெற்றோருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர்.மகாராஜன் இன்று (22.01.2024) நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்கள்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், அனுமந்தன்பட்டியை சேர்ந்த வின்சென்ட் - வேளாங்கண்ணி தம்பதியினரின் இளைய மகன் அன்பு ராஜன் (வயது23). முதுகலை பட்டப் படிப்பு முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
கடந்த 20.01.2024 அன்று அனுமந்தன்பட்டியில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த சரக்கு வேன் மீது நிலைதடுமாறி மோதியதில் அன்பு ராஜன் படுகாயம் அடைந்தார்.
அன்புராஜாவுக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அன்புராஜாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவமனை நிருவாகத்தால் அறிவிக்கப்பட்டது.
இறந்த அன்புராஜனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக அன்பு ராஜனின் பெற்றோர்கள் மருத்துவர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து மூளைச்சாவு அடைந்த அன்புராஜனின் இதயம், 2 கண், 2 சிறுநீரகம், கல்லீரல், தோல், உள்ளிட்ட உடல் உறுப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருப்பவர்களுக்கு தானமாக வழங்கப்பட உள்ளது.
இதுவரை மதுரை அரசு மருத்துவமனையில் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வந்த உடல் உறுப்பு தானம் அறுவை சிகிச்சை முதல் முறையாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் இன்று மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில் தேனி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த த.வடிவேல் உடல் உறுப்புகளை கொடையாக தந்தமைக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் 26.09.2023 அன்று சின்னமனூர் பகுதியில் உள்ள அன்னாரின் வீட்டிற்கு நேரடியாக சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதன்படி, உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பிலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.