இயற்கை விவசாயிகள் சான்றிதழ் : பதிவு செய்ய ஆட்சியர் அழைப்பு
தர்மபுரி மாவட்ட இயற்கை விவசாயிகள் அங்கக வேளாண்மை சான்றிதழ் பெற பதிவு செய்யுமாறு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,தர்மபுரி மாவட்டத்தில் செயற்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லி இல்லாமல் இயற்கை சாகுபடி செய்யப்படும் வேளாண் பொருட்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. மேலும், கூடுதல் விலையுடன், ஏற்றுமதி வாய்ப்பும் அதிகரித்துள்ளது.
இயற்கை சாகுபடி முறையில் விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் இயங்கும் தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத்துறை மூலம் அங்கக வேளாண்மை சான்றிதழ் - ஆர்கானிக் சர்ட்பிகேட் வழங்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள், தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத்துறையின் இணையத்தில் (www.tnocd. net) உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அதனுடன் பண்ணையின் பொது விவரக் குறிப்பு, பண்ணையின் வரைபடம் மண் மற்றும் பாசன நீர் தரச் சான்று, ஆண்டு பயிர் திட்டம், சிட்டா நகல், நிரந்தரக் கணக்கு எண்(பேன்கார்டு), புகைப்படம் ஆகியவற்றை மாவட்ட விதைச் சான்று உதவி இயக்குனர் அலு வலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். என ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.