பிற மாநில தொழிலாளர்கள் வாக்களிக்குச் செல்லும் பொழுது ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்
இந்தியாவின் பிற மாநிலங்களில் வாக்குரிமை உள்ள வெளி மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்களிக்க செல்ல ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.
2024-ம் ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தல் முதல்கட்டமாக தமிழகத்தில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் பிற மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் 26.04.2024, 07.05.2024, 13.05.2024, 20.05.2024, 25.05.2024 மற்றும் 01.06.2024 ஆகிய தேதிகளில் பல கட்டங்களாக மக்களவை மற்றும் சில மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் வெளி மாநிலங்களில் வாக்குரிமை உள்ள தினக்கூலி-தற்காலிக பணியாளர்கள்- ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களும் அந்தந்த மாநில தேர்தல் நாளில் அவரவர் சொந்த மாநிலத்திற்கு சென்று வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135பி-ன் கீழ் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அனைத்து தொழிற்சாலைகள் கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவரவர் சொந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்களிக்க செல்லும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு அன்றைய தினத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தவறும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தமிழகத்தில் தங்கி பணியாற்றும் வெளி மாநிலங்களில் வாக்குரிமை பெற்ற தொழிலாளர்கள் மேற்படி தேர்தல் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத தொழிற்சாலைகள் கட்டுமான நிறுவனங்கள் தொடர்பாக புகார் அளிக்க ஏதுவாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான குறைகளை 88257 11344, 94437 64310, 98658 11166, 93447 45064 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கேட்டுக் கொண்டுள்ளார்.