சேதம் அடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி
அரசு காலணியில் சேதம் அடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, வேட்டமங்கலம் ஊராட்சியில் உள்ள கொங்கு நகரில், சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது தேவைக்காக கடந்த 2013 -14 ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
இந்த குடிநீர் தொட்டி மூலம் கொங்கு நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே மேல்நிலை குடிநீர் தொட்டி சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் தொட்டியை பராமரிப்பு செய்வதற்காக தூய்மை பணியாளர்கள் மேலே செல்வதற்கு மிகவும் அச்சம் கொண்டுள்ளனர். எனவே, இந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட வேட்டைமங்கலம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.