மானிய விலையில் நெல் விதைக்கும் கருவி
நெல், உளுந்து மற்றும் நிலக்கடலை விதை விதைக்கும் கருவி மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
நெல், உளுந்து மற்றும் நிலக்கடலை விதை விதைக்கும் கருவி மானிய விலையில் வழங்கப்பட உள்ளது என, பேராவூரணி வட்டார வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ராணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரத்தில், டிராக்டர் மூலம் இயங்கும் விதை விதைக்கும் கருவி மானிய விலையில் வழங்கிட ஒரு எண் இலக்காக பெறப்பட்டுள்ளது. நேரடி நெல்விதைப்பு செய்யும் விவசாயிகள் மற்றும் உளுந்து நிலக்கடலை பயிரிடும் விவசாயிகள் இந்த விதை விதைக்கும் கருவியினை வாங்கி பயனடையலாம். டிராக்டர் மூலம் இயக்கப்படும் இந்த விதை விதைக்கும் கருவியின் முழுவிலை ரூ.87,181 - பொது பிரிவினருக்கு ரூ.19,300 மானியமும், சிறு குறு விவசாயிகள், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு ரூ.23,100, மானியமும் வழங்கப்படும்.
இக்கருவியினை பெற விரும்பும் விவசாயிகளுக்கு அவர்களது பெயரில் பட்டா, அவரது பெயரில் டிராக்டர் மற்றும் ஆர்.சி புத்தகம் இருத்தல் அவசியமாகும். தங்கள் தொகுதி வேளாண்மை உதவி அலுவலர்கள் அல்லது பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்" எனக் கூறப்பட்டுள்ளது.