சின்னசேலத்தில் ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்
சின்னசேலத்தில் ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சின்னசேலத்தில் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வை தாக்கிய ஊராட்சி செயலாளரை சஸ்பெண்ட் செய்து, வட்டார ஊராட்சி பி.டி.ஓ., உத்தரவிட்டார்.
சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக பணிபுரிபவர் கண்ணுசாமி மகன் ஜெகநாதன்,56; வருகிற லோக்சபா தேர்தலையொட்டி, சின்னசேலம் ஒன்றியத்தில் பணிபுரியும் சில ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்வதற்கான பட்டியலை ஜெகநாதன் தயார் செய்துள்ளார்.
அதில், தொட்டியம் ஊராட்சி செயலாளராக பணிபுரியும் துரை என்பவரை வி.பி.அகரம் ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த ஊராட்சி செயலாளர் துரை, நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த பி.டி.ஓ., ஜெகநாதனை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
உடன் மயக்கமடைந்த பி.டி.ஓ., ஜெகநாதனை அலுவலகத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இது குறித்து பி.டி.ஓ., ஜெகநாதன் அளித்த புகாரின் பேரில், ஊராட்சி செயலாளர் துரை மீது 3 பிரிவுகளின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
மேலும், அரசு அலுவலகத்திற்குள் நுழைந்து பணியில் இருந்த பி.டி.ஓ., வை தாக்கியதற்காக, ஊராட்சி செயலாளர் துரையை சஸ்பெண்ட் செய்து, சின்னசேலம் வட்டார வளர்ச்சி பி.டி.ஓ., ரவிசங்கர் உத்தரவிட்டார்.