புண்டரீகாட்சப் பெருமாள் கோயிலில் பங்குனி தேரோட்ட விழா

திருச்சி மாவட்டம், திருவெள்ளறையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ புண்டரீகாட்சப் பெருமாள் கோயிலில் பங்குனி தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைப்பெற்றது.

Update: 2024-04-05 01:22 GMT

பங்குனி தேரோட்டம்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் உப கோயில்களில் ஒன்று திருவெள்ளறையில் உள்ள புண்டரீகாட்சப் பெருமாள் கோயில்.. இக்கோயிலில் பங்குனி மாதத்தில் நடைபெற்று வரும் தேரோட்டம் சிறப்பு வாய்ந்ததாகும்.இந்த ஆண்டு பங்குனி தேர் திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று அதிகாலை பெருமாளும் பங்கஜவள்ளி தாயாரும் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அனந்தராயர் மண்டபம் சேர்ந்தனர்.

பின்னர் கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்து கொடியேற்றம் நடைப்பெற்றது. கொடியேற்றத்தை தொடர்ந்து இரவு பெருமாளும் உற்சவ பங்கஜவள்ளி தாயாரும் திருச்சிவிகையில் புறப்பட்டு திருவீதி வலம் வந்து கண்ணாடி அறை சேர்ந்தனர். திருவிழாவின் அடுத்தடுத்த நாட்களில் பெருமாள் கருட வாகனம், ஹம்ச வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் புறப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது. 7ம் நாளில் பெருமாளும் தாயாரும் அனந்தராயர் மண்டபத்தில் நெல்லளவு கண்டருளி பூந்தேரில் வலம் வந்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக பெருமாளும் தாயாரும் திருத்தேரில் எழுந்தருளினர்.இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இவ்விழாவில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பெருமாளுக்கு மரியாதை செய்த பிறகு மதியம் 12 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரோடும் வீதிகளில் வலம் வந்த தேர் மாலையில் நிலைக்கு வந்தது. திருவெள்ளறை ஊராட்சி சார்பில் விரிவான குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி, துப்புரவு பணிகள் செய்யப்பட்டிருந்தன. தேரோட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News