பயன்பாடின்றி முடங்கி கிடக்கும் காங்கேயம் மாட்டுச் சந்தை வளாகம்
காங்கேயம் மாட்டுச்சந்தை வளாகம் துவங்கிய நாள் முதல் பயன்பாடு இன்றி முடங்கி கிடக்கிறது.
நாட்டு மாடு என்றாலே அது காங்கேயம் இன மாடுகள் தான் அனைவரின் கவனத்திற்கும் வரும். அப்பேற்பட்ட பாரம்பரியமிக்க காளை மாடுகளுக்கு பேர் போன ஊர் காங்கேயம் ஆகும். இங்கு கடந்த வருடம் நாட்டு மாடுகள் விற்பனைக்காக நிரந்தர மாட்டுச்சந்தையை தமிழக அரசு காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட காங்கேயம்-தாராபுரம் பிரதான சாலையில் அமைத்துக் கொடுத்தது.
இந்த மாட்டுச்சந்தை பிரதிவாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் எனவும், கன்னிவாடி மற்றும் அந்தியூர் மாட்டுச் சந்தைக்கு அடுத்து காங்கேயம் மாட்டுச் சந்தை செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பல மாதங்களாக இந்த மாட்டுச்சந்தை பயன்பாடின்றி கைவிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது பெய்து வரும் கோடைகால மழையால் காங்கேயம் மாட்டுச்சந்தை வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி முடங்கி கிடக்கிறது.
மேலும் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் காங்கேயம், கண்ணபுரம் தேர்த் திருவிழாவில் நாட்டு மாடுகள், கன்றுகள், ஆடுகள் மற்றும் குதிரைகள் ஆகியவை விற்பனை செய்யப்படும். இந்த விழாவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக் கணக்கான கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு மாடுகளை வாங்கி செல்வர்.
அந்த வகையில் இந்த காங்கேயம் மாட்டுச்சந்தை வாரந்தோறும் செயல்படும் பட்சத்தில் இப்பகுதி வாழ் விவசாயிகள் நாட்டு மாடு விற்பனையில் நன்மை அடைவர் எனவும், வரும் காலத்தில் இச்சந்தை மாபெரும் வியாபாரத் தளமாக அமையும் பட்சத்தில் காங்கேயம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களின் மேம்பாடும்,
விவசாயிகளின் பொருளாதாரமும் உயரும் வாய்ப்புள்ளது எனவும், நாட்டு மாடுகளின் தேவை எளிதில் பூர்த்தியாகும் எனவும், நாட்டு இன மாடுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் எனவும் காங்கேயம் பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.