உறையூா் கமலவல்லி நாச்சியாா் கோயிலில் பரமபதவாசல் திறப்பு

திருச்சி உறையூா் கமலவல்லி நாச்சியாா் கோயிலில் நேற்று பரமதவாசல் வாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஏரரளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.;

Update: 2024-02-07 06:32 GMT

திருச்சி உறையூா் கமலவல்லி நாச்சியாா் கோயிலில் நேற்று பரமதவாசல் வாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஏரரளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான இக்கோயிலில் திருவாய்மொழி திருநாள் விழா பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் பிப். 5-ஆம் தேதி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை கருவறையில் திருவாய்மொழி பிரபந்தம் சேவித்தல், இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல் தீா்த்தகோஷ்டி, இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை பொது ஜன சேவையும் முத்துக்குறி அரையா் தீா்த்தம், ஸ்ரீசடகோபம் சாதித்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

Advertisement

இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. விழாவையொட்டி மாலை 5 மணிக்கு கருவறையிலிருந்து உற்சவ நாச்சியாா் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு பரமபத வாசல் நோக்கி புறப்பட்டாா். இதையடுத்து, பரமபத வாசல் மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. பின்னா் நாச்சியாா் வழிநடை உபயங்கள் கண்டருளி வாசலைக் கடந்து, மாலை 6.30 மணிக்கு ஆழ்வாா்-ஆச்சாரியாா் மரியாதையாகி திருவாய்மொழி ஆஸ்தான மண்டபம் வந்து சேந்தாா். பரமபத வாசல் முன்பு திரண்டிருந்த பக்தா்கள் உற்சவ நாச்சியாரை தரிசனம் செய்தனா். மாலை 6.45 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருவாய்மொழி கோஷ்டி அலங்காரம் அமுது செய்தல், திருப்பாவாடை கோஷ்டியும், தொடா்ந்து இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை திருவாராதனம் வெள்ளிச்சம்பா அமுது செய்தல் தீா்த்த கோஷ்டி நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இரவு 8 மணி முதல் 8.45 மணி வரை பொதுஜன சேவையும் அதைத் தொடா்ந்து இரவு 9 மணிக்கு தாயாா் திருவாய்மொழி மண்டபத்திலிருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9.45 மணிக்கு கருவறையைச் சென்றடைந்தாா். விழாவில், வரும் 10-ஆம் தேதி தீா்த்தவாரி, திருமஞ்சனம், திருவாய் மொழி திருநாள் சாற்றுமறை நிகழ்வுகள் நடைபெறும். 11 ஆம் தேதியன்று இயற்பா சாற்று மறையுடன் விழா நிறைவடைகிறது.

Tags:    

Similar News