கரும்பு பயிரில் நோய் தாக்குதல் குறித்த விழிப்புணர்வு முகாம்

பரமத்தி வேலூர் அருகே கரும்பு பயிரில் பொக்கா போயிங் நோய்த்தாக்குதல் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2024-03-06 13:13 GMT

கரும்பு பயிர் 

பரமத்தி வேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள குரும்பலமகாதேவியில் கரும்பில் பொக்கா போயிங் நோய்த்தாக்குதல் கட்டுப்பாடு குறித்து  கபிலர்மலை மற்றும் பரமத்தி வட்டாரங்களை சேர்ந்த கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கான ‌விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட வேளாண்மைத்துறை மற்றும் பொன்னி சர்க்கரை ஆலை  இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த முகாமை நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி தொடங்கி வைத்து இன்றைய சூழலில் கரும்பு சாகுபடி பரப்பை அதிகப்படுத்துவதன் அவசியம் குறித்து பேசினார். நாமக்கல் மாவட்ட வேளாண்மைத்துறை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) கோவிந்தசாமி  முன்னிலை வகித்து கரும்பு சாகுபடியில் பல்வேறு தொழில்நுட்பங்களை விவசாயிகள் கடை பிடிப்பதன் அவசியம் குறித்து  பேசினார்.

கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்  ராதாமணி  கரும்பு சாகுபடியில் இயந்திரங்களை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து வலியுறுத்தி பேசினார். சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர்  அன்பானந்தன் தன்னுடைய சிறப்புரையில் கரும்பை தாக்கும் பல்வேறு பூச்சி மற்றும் நோய்கள்,  கரும்பு சாகுபடியில் இன்று சேதத்தை விளைவிக்கும் பொக்கா போயிங் (இலை சுருட்டு அழுகல் நோய்) நோய்க்கான காரணிகள், அதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

மேலும் நாமக்கல் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு), கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பல்வேறு பயிர் சாகுபடி தொழில்நுட்பங்களை பற்றி பேசினார். முடிவில் பொன்னி சர்க்கரை ஆலை கரும்பு மேலாளர்  செல்வராஜ்  நன்றி கூறினார். விழிப்புணர்வு முகாமிற்கான ஏற்பாடுகளை பொன்னி சர்க்கரை ஆலை குரும்பலமகாதேவி அலுவலக கரும்பு விரிவாக்க அலுவலர்கள், ஜேடர்பாளையம் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் அட்மா திட்ட தொழில்நுட்ப அலுவலர்கள் இணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News