பட்டுக்கோட்டை : தலைமை அஞ்சலகத்தில் அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை
பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் மின்விசிறி, குடிநீர் வசதி, இருக்கை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென பட்டுக்கோட்டை என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகரிலுள்ள, தலைமை அஞ்சலகத்தில் தபால்தலை விற்பனை மையம், பல்முனை சேவை மையம், வங்கிப் பிரிவு, பார்சல் அனுப்பும் இடம் போன்ற அஞ்சல் சேவை பிரிவுகள் மற்றும் ஆதார் மையமும் இயங்கிவருகிறது தினந்தோறும் தலைமை அஞ்சலகத்திற்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள், ஓய்வூதியர்கள் வந்து செல்கின்றனர் இங்கு போதுமான அளவு காற்றோட்ட வசதி இல்லாமல் இருக்கிறது.
தற்சமயம் கடுமையான கோடை வெயிலின் காரணமாக பட்டுக்கோட்டை பகுதியில் அதிக வெப்பத் தாக்குதல் காணப்படுகிறது பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் பல்முனை சேவை மையத்தில் பொதுமக்கள் அமரும் இடத்தில் மின் விசிறி பழுதடைந்துள்ளது ஆதார் மையத்தில் போதுமான மின்விசிறி வசதி இல்லை. இதனால் தலைமை அஞ்சலகத்திற்கு வரும் மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள், ஆதார் மையத்திற்கு வரும் பெரியோர்கள், குழந்தைகள் வெயிலின் தாக்கத்தினாலும், வியர்வையினாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நீரிழப்பு ஏற்பட்டு உடல் நலன் பாதிக்கப்படலாம்
இதுகுறித்து, பொதுமக்கள், வர்த்தகர்கள், ஓய்வூதியர்கள், அரசு அலுவலர்கள் சார்பில், பட்டுக்கோட்டை என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் தலைவர் வ.விவேகானந்தம், செயலாளர் ஈகா வைத்தியநாதன், பொருளாளர் மா.வீரபத்திரன், துணைத் தலைவர் ரெஜினால்ட் செல்வகுமார், துணை செயலாளர் ஞா.ஜெயசீலன் ஆகியோர், பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலக அதிகாரி, பட்டுக்கோட்டை அஞ்சலக கண்காணிப்பாளர் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்
அந்த கோரிக்கை மனுவில், "பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில், பழுதடைந்துள்ள மின்விசிறிகளை உடனடியாக பழுது பார்க்க வேண்டும். ஆதார் பிரிவில் மேலும் போதுமான அளவு மின்விசிறிகள் அமைக்க வேண்டும். வெப்பக்காற்றை வெளியேற்றும், மின்விசிறிகளை வைக்க வேண்டும். கோடை வெயிலின் தாகத்தை தீர்க்க பாதுகாக்கப்பட்ட குடிநீரை தலைமை அஞ்சலகத்தில் வைக்க வேண்டும் . அஞ்சல் தலை விற்பனை பிரிவு, பல்முனை சேவை பிரிவு, வங்கி சேவை பிரிவிற்கு வரும் வாடிக்கையாளர்கள் அமரவும், படிவங்களை பூர்த்தி செய்யவும் போதுமான இட வசதி இல்லாமல் உள்ளது. எனவே, இங்கு போதுமான இட வசதி, இருக்கைகள், படிவங்களை பூர்த்தி செய்ய மேஜை வசதிகளை செய்து தர வேண்டுகிறோம். வாய்ப்பு வரும் போது முக்கியமான அலுவலக பகுதியிலும் பொது மக்கள் அமரும் இடத்தில் குளிர் சாதன வசதி செய்து தர வேண்டும்" என அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.