தரமற்ற பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் 

பட்டுக்கோட்டையில் உணவு பாதுகாப்புத்துறை நடமாடும் பகுப்பாய்வு கூடம் மூலம் ஆய்வு செய்து தரமற்ற பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2024-05-15 09:49 GMT

பட்டுக்கோட்டையில் உணவு பாதுகாப்புத்துறை நடமாடும் பகுப்பாய்வு கூடம் மூலம் ஆய்வு செய்து தரமற்ற பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் உத்தரவின்படி, தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சித்ரா அறிவுறுத்தலின்படியும், பட்டுக்கோட்டை நகர் மற்றும் வட்டாரப் பகுதிகளில் அனைத்து கடைகள், விற்பனை நிலையங்கள், உணவகங்களில் உள்ள உணவுப் பொருட்களில் கலப்படங்கள் உள்ளதா என வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  ஆய்வின்போது நடமாடும் உணவு பகுப்பாய்வுக் கூடம் அங்கு வரவழைக்கப்பட்டு, கடைகளில் இருந்து எடுக்கப்பட்ட உணவு மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இவ்வாறு 30 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு முடிவுகள் உடனடியாக வழங்கப்பட்டது. இதில் 25 உணவு மாதிரிகள் தரமானதாகவும், 5 உணவு மாதிரிகள் கலப்படம் மற்றும் தரமற்றதாக இருப்பது கண்டறியப்பட்டது.  தரமற்ற மற்றும் கலப்பட உணவுகள் கண்டறியப்பட்ட ஐந்து கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம்-2006, பிரிவு 55 இன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

மேலும், தரம் குறைவான உணவை விற்பனை செய்த உணவகத்திற்கு ரூபாய் 3,000, தடை செய்யப்பட்ட நெகிழிப்பை பயன்படுத்திய ஒரு கடைக்கு ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து, பட்டுக்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் கூறுகையில், "இந்த நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடம் ஒவ்வொரு பகுதிக்கும் மாதம் இரண்டு முறை வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும். மக்கள் அன்றாடம் வாங்கும் மற்றும் பயன்படுத்தப்படும் உணவுகள் தரம் குறைந்தது மற்றும் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டு உணவு பொருட்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு கொட்டி அழிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் கலப்படம் மற்றும் தரமற்ற, தரம் குறைந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News