காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!
ராணிப்பேட்டை அருகே பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே கோடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு கடந்த 2 மாதங்களாக சீரான மின்சாரம் இல்லாததால் குடிநீர் சரியாக வினியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கோடம்பாக்கம் கிராம ஆதிதிராவிடர் பகுதி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் நேற்று காலை பாணாவரம்-நெமிலி செல்லும் சாலையில் கோடம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பாணாவரம் போலீசார் மற்றும் நெமிலி வட்டார வளர்ச்சி அலவலர் முஹம்மது சையூப்தீன் ஆகியோர் விரைந்துச் சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.