இரும்பாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை
இ.புதுப்பாளையம் கிராமத்தில், இரும்பாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தினர். மல்லசமுத்திரம் அருகேயுள்ள, இ.புதுப்பாளையம் கிராமத்தில் தற்சமயம், இரும்பாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. வழக்கம் போல் நேற்று காலை கட்டுமான பணிகள் துவங்கியது. அச்சமயத்தில், அப்பகுதியை சேர்ந்த 200 க்கும மேற்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு இரும்பாலை அமைந்தால் கிராமத்தில் மாசுகட்டுபாடு ஏற்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என தெரிவித்து, பணிகளை தொடரவிடாமல் இரும்பாலை அமையவிருக்கும் இடத்தை முற்றுகையிட்டனர்.
மேலும், அந்த இடத்தில் சுமார் ஒருகிலோ மீட்டர் தொலைவிற்கு வருவாய்துறையினரின் அனுமதி பெறாமல் வெள்ளைகற்களை வெட்டியுள்ளனர். இதற்கும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி துணை தாசில்தார் தமிழ்செல்வி, ஆர்.ஐ.,குணசீலன், வி.ஏ.ஓ.,ஜெயந்தி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மறுஉத்தரவு வரும்வரையில் பணிகள் தொடரக்கூடாது என தெரிவித்ததையடுத்து, மக்கள் போராட்டத்தை விடுத்து கலைந்து சென்றனர்.
மேலும், கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்திய பொக்லின் இயந்திரத்தை அதிகாரிகள் கைப்பற்றி, மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.