ஊருக்குள் வராமல் செல்லும் பேருந்துகளால் பொதுமக்கள் அவதி
புலிகரை ஊருக்குள் வராமல் செல்லும் பேருந்துகளால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
தர்மபுரி மாவட்டம். 08/12/2023 புலிகரை ஊருக்குள் வராமல் செல்லும் பேருந்துகளால் பொதுமக்கள் அவதி குறித்து ஆலோசனை கூட்டம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலையத்தில் சோமஹள்ளி, புலிகரை உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு அரசு மற்றும் நகர பேருந்துகள் ஊருக்குகள் வராமல் செல்வது குறித்து பாலக்கோடு இன்ஸ்பெக்டர் பாபுசுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, அரசு போக்குவரத்து கழக மேலாளர் இளங்கோ, தேசிய நெடுஞ்சாலை அதிகாரி மதன் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் தர்மபுரி முதல் ஓசூர் வரை தற்போது 6வழி தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இச்சாலை பணிகள் தர்மபுரி முதல் பாலக்கோடு வரை பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் கசியம்பட்டி, சோமனஹள்ளி, புலிகரை, பொடுத்தம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு வழக்கமாக செல்லக்கூடிய அரசு மற்றும் நகரப் பேருந்துகள் என அனைத்து வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலையை வழியாக சென்று வருவதால், இக்கிராமங்களை சுற்றி தினந்தோறும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் ஓசூர் பெங்களூர் மற்றும் தர்மபுரி சேலம் உள்ளிட்ட வெளிமாவட்ட மற்றும் மாநிலங்களுக்கு பள்ளி, கல்லூரி, மற்றும் வேலைகளுக்காக சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
போதிய பேருந்து வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் அரசு மற்றும் நகரப் பேருந்துகள் தனியார் பேருந்துகள் என இரவு நேரங்களில் சீராக இயக்கப்படாததால் முதியவர்கள், கர்ப்பிணிகள் , நோயாளிகள் என பலதரப்பட்ட மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இப்பிரச்சனையை தீர்க்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களிடையே நடத்திய பேச்சுவார்தையில் பேசிய பேருந்து உரிமையாளர்கள் கடகத்துர் ஐ.டி.ஐ. அருகே இணைப்பு சாலை ஏற்படுத்தி கொடுத்தால் ஊருக்குள் வருவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மதன் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக கூறியதை அடுத்து இனிவரும் காலங்களில் அனைத்து கிராம பகுதிகளுக்கும் வழக்கம் போல் சீராக பேருந்துகளை இயக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் பேருந்து உரிமையாளர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். பேருந்து உரிமையாளர்கள் இதனை ஏற்று கொண்டதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.