மெயின் ரோட்டில் பள்ளம்: விபத்தில் சிக்கும் வாகனங்கள்!
தட்டாா்மடம் அருகே மெயின் ரோட்டில் வேகத் தடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.
தூத்துக்குடி மாவட்டம், பிரகாசபுரம் விலக்கில் தட்டாா்மடம், இடைச்சிவிளை, திசையன்விளை பிரதான சாலை உள்ளது. இந்தச் சாலையில் பிரகாசபுரம், நடுவக்குறிச்சி, விஜயராமபுரம், சாத்தான்குளம் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் திரும்புகின்றன. இந்த விலக்கு பகுதியில் விபத்து அபாயம் உள்ளதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்பேரில், வேகத்தடை அமைப்பதற்காக சாலையை குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், வேகத்தடை அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இப்பள்ளத்தில் தடுமாறி விழுந்து காயமடையும் நிலை தொடா்கிறது. குறிப்பாக இரவு நேரத்தில் பலா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, அங்கு விரைந்து வேகத்தடை அமைக்க வேண்டும் அல்லது சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட பள்ளத்தை நிரப்ப வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறைக்கு எம்பவர் இந்தியா கெளரவ செயலாளர் ஏ.சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.