பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம் ஆய்வு

பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம் ஆய்வு செய்தார்.

Update: 2024-02-15 08:52 GMT

ஆய்வு செய்த அதிகாரி

 பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும், அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு மினரல் கார்ப்பரேசன் நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அனில் மேஷ்ராம், மாவட்ட ஆட்சியர் கற்பகம் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, நொச்சியம் நியாயவிலை கடையினை பார்வையிட்ட பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள பொருள்களின் விவரங்கள், கடைகளில் தற்போது உள்ள இருப்பு குறித்தும், கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து, நொச்சியம் ஊராட்சியில், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் தார்சாலையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

பின்னர் செஞ்சேரி அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர்கள் விடுதியினை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர் , விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, வருகை பதிவேடு ஆகியவை குறித்து பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எளம்பலூர் ஊராட்சியில், தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் பிறைசூடன் என்பவர் வயலில் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் 100% மானியத்தில் வழங்கப்பட்ட சொட்டு நீருடன் கூடிய பப்பாளி சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலத்தை பார்வையிட்டு, விவசாயத்தில் லாபம் மற்றும் பயன்கள் குறித்து விவசாயியிடம் கேட்டறிந்தார். பின்னர், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கு மாதவி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.17.43 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கான கட்டடத்தை பார்வையிட்ட பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பணியினை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் வீரமலை, மாவட்ட ஆட்சியரின் வேளாண்மை நேர்முக உதவியாளர் ராணி, வட்டார வளர்ச்சி அறிவழகன், வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News