பெரம்பலூர் : விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம்
பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
By : King Editorial 24x7
Update: 2023-10-27 16:08 GMT
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அக்டோபர் 27ம் தேதி இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் காய்கள் அதிக அளவில் பயிர் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை கையில் ஏந்தி மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து தங்கள் குறைகளை விவசாயிகள் தெரிவித்தனர், மேலும் இது குறித்து அவர்கள் தெரிவிக்கும் போது கடந்த ஆண்டு விட இந்தாண்டு 4 ஆயிரம் ஹக்டேர் அதிகமாக, மாவட்டத்தில் 68 ஆயிரம் ஹக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது, தற்போது போதுமான மழை இல்லாத காரணத்தால் வறட்சி நிலையில் மக்காசோள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன, ஆகவே வறட்சி மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு போதுமான இன்சூரன்ஸ் காப்பீடு மற்றும் நிவாரணத்தை அரசிடம் இருந்து விவசாயிகளுக்கு பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேபோல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுறவு வங்கியில் நகை கடன் பெற்ற விவசாயிகளுக்கு தள்ளுபடி அறிவித்தும் தகுதி உடைய 158 நபர்களுக்கு நகைகள் திருப்பி வழங்கப்படாமல் இருந்தது அதனை விவசாயிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் தமிழக அரசும் அதை உரிய விவசாயிகளுக்கு நகையை திருப்பி வழங்கியுள்ளது இதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டனர், மேலும் நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்குவது போல் மக்காச்சோள பயிருக்கு ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக கொள்முதல் செய்ய விவசாயிகளின் கோரிக்கை ஏற்று மாவட்டத்தில் இரண்டு இடங்களில் மக்காச்சோளம் கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது, இதனை முறையாக விவசாயிகளுக்கு தெரியப்படுத்தி அரசு நிர்ணயித்த கூடுதல் விலையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்திருப்பதாக தெரிவித்தனர்.