பேராவூரணி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

பேராவூரணி ஒன்றியக்குழு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினர்.

Update: 2024-02-04 04:42 GMT

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், தலைவர் சசிகலா ரவிசங்கர் தலைமையில்,  நடைபெற்றது.  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொய்யாமொழி, தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் வரவேற்றார்

கூட்டத்தில், உறுப்பினர் உ.துரைமாணிக்கம் பேசுகையில், "ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எந்த வளர்ச்சி திட்டப் பணிகளையும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். எனவே, ஒன்றியத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி, சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும். செங்கமங்கலம் ஊராட்சியில் இருந்து பின்னவாசல் செல்லும் சாலையில், அம்புலி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும். 

உறுப்பினர் பாக்கியம் முத்துவேல், "பதவி உயர்வு பெற்றுச் செல்லும் வட்டார வளர்ச்சி அலுவலர் தவமணியை பாராட்டுகின்றோம். ஒன்றியக் குழு பணிகளுக்கு போதிய நிதி பெறுவதற்காக சட்டமன்ற உறுப்பினர் மூலம் துறை அமைச்சர், முதலமைச்சரை அணுகி நிதி பெற வேண்டும். ஒட்டங்காடு ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டங்காட்டில் இருந்து பழனிக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். 

உறுப்பினர் பெரியநாயகி, "சித்துக்காடு சித்துக்குளம் சீரமைக்க நடவடிக்கை எடுத்த ஒன்றியக் குழு தலைவருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். அம்மையாண்டி - சித்துக்காடு சாலையை அமைத்து தர வேண்டும். அரண்மனை தோப்பு பகுதியில் குறுக்கு சாலைகள் அமைத்து தர வேண்டும். பள்ளியில் மேற்கூரையை சீரமைத்து தரவேண்டும். பொக்கன்விடுதி தெற்கு பகுதியில் அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டும். 

ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, "50 ஆண்டுகளில் கடந்து விட்ட, புனல்வாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, புதிய கட்டிடம் அமைக்க உள்ள பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். அப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்" என்றார். 

ஒன்றியக்குழு தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பொய்யாமொழி ஆகியோர் உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசினர்.  முன்னதாக, அண்மையில் மறைந்த உறுப்பினர் மதிவாணனுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.  கூட்டத்தில், உறுப்பினர்கள் ராஜலட்சுமி ராஜ்குமார், நவநீதம் ஆறுமுகம், ராஜ பிரியா ஜெயராமன், அண்ணாதுரை, ரேவதி கண்ணன், அமிர்தவல்லி கோவிந்தராஜ், சுந்தர்  மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News