சாதி சான்றிதழ் வழங்க கோரி காட்டுநாயக்கன் சமூக மக்கள் மனு

நெமிலியில் நடந்த ஜமாபந்தியில் காட்டு நாயக்கன் சாதி சான்றிதழ் கேட்டு காட்டுநாயக்கன் சமூகத்தினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2024-06-27 06:03 GMT

மனு அளிக்க வந்த மக்கள் 

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சியில் உள்ள காட்டுநாயக்கன் தெருவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டுநாயக்கன் சமூகத்தினர் வசித்துவருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். தற்போது இவர்களின் பிள்ளைகள் பள்ளியில் கல்வி பயின்றுவருகின்றனர். அவர்களின் மாற்று சான்றிதழ்களில் காட்டுநாயக்கன் சமூகம் என்று பதிவு செய்யப்படுகிறது.

ஆனால் நெமிலி வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சாதி சான்றிதழ்களில் இவர்களுக்கு எம்.பி.சி. ஜோகி என்று குறிப்பிட்டு வழங்குகின்றனர். இதனால் மேற்கண்ட இரண்டு துறைகள் சாதி சான்றிதழ் வழங்குவதில் முரண்பாடு காட்டிவருகிறது. இதனால் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இந்தநிலையில் அவர்கள் தற்போது நெமிலி தாலுகா அலுவலகத்தில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்றுவரும் ஜமாபந்தியில் எஸ்.டி. காட்டுநாயக்கன் என்று சான்றிதழ் வழங்கக்கோரி 50-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், பெரியவர்கள் மலைவாழ் மக்கள் சங்க நெமிலி தாலுகா பொறுப்பாளர் வெங்கடேசன் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தபட்ட துறை அதிகாரிகள், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News