MyV3 Ads நிறுவனத்தை சேர்ந்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாமகவினர் மனு
MyV3 Ads நிறுவனத்தை சேர்ந்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாமகவினர் மனு அளித்துள்ளனர்.
MyV3 Ads என்ற நிறுவனம் கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.இந்நிறுவனம் மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாகவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தொடர்ந்து பாமக வினர் புகார் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி யை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட கண்ணன் என்ற நபர் MyV3 Ads மீது நீங்கள் அளிக்கும் புகார்களை நிறுத்த வேண்டுமென கொலை மிரட்டல் விடுத்ததாக அசோக் ஸ்ரீநிதி செல்போன் உரையாடல் பதிவு ஒன்றை அவரது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுருந்தார்.
அந்த கொலை மிரட்டலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்த நபர் நிறுவனம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிக்கையை வெளியிட்டிருந்தார்.இந்நிலையில் அசோக் ஸ்ரீநிதி மீது கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகள் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் கோவை மாவட்டத் தலைவர் தங்கவேல் பாண்டியன் கொலை மிரட்டல் விடுத்த நபர் மற்றும் அந்நிறுவனத்தின் உரிமையாளர் இருவர் மீது மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அசோக் ஸ்ரீநிதி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றுள்ளதாகவும்,
தாங்கள் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்துள்ளதாக தெரிவித்தார்.மேலும் ஏற்கனவே அந்த நிறுவனத்தின் மீது புகார் அளித்த போதிலும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டிய அவர் இனி மேலும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தாங்கள் நீதிமன்றத்தை நாட இருப்பதாக கூறினார்.