உலர் களம் அமைக்க வேண்டி ஆட்சியரிடம் மனு
மேட்டுப்பாளையம் கிராமத்தில் உலர்க்களம் வேண்டும் எனவும், வேண்டாம் எனவும் மாறி மாறி ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருதரப்பினர் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் கிராமத்தில் கதிர் அடிக்கும் உலர் களம் அமைக்க கூடாது என்று ஆட்சியரிடம் கிராம மக்கள் சிலர் மனு கொடுத்த நிலையில், தொடர்ந்து அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உலர் களம் வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மே-24ம் தேதி மாலை 3மணி அளவில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் இதனைத் தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில், தங்கள் பகுதிக்கு கதிர் அடிக்கும் உலர்களம் மற்றும் குடோன் அமைப்பதற்கு அரசுக்கு கோரிக்கை வைத்ததன் பேரில் தற்போது அதற்கான பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது,
இதில் உலர்களம் அமைப்பதற்கு தற்போது உள்ள ஊராட்சி மன்ற தலைவர் இடத்தை தேர்வு செய்து கொடுத்தார். இந்நிலையில் அதற்கான கட்டுமான காண்ட்ராக்ட் ஊராட்சி மன்ற தலைவருக்கு கிடைக்கவில்லை என்பதால், உலர் களம் அமைக்கும் பணியை கிராம மக்களை வைத்து பிரச்சனை செய்து தடுத்து வருகிறார். கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் 90 சதவீதம் பேர் உலர் களம் வேண்டுமென கேட்டுள்ளனர், மேலும் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களுக்கு ஏதுவாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் அங்கு விளை பயிர்களை காய வைப்பதற்கு உலர்களம் கட்டி முடிக்க ஆவணம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருப்பதாக தெரிவித்தனர்.
மனுவை பெற்ற ஆட்சியர் துறை அலுவலர்களிடம் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். மேட்டுப்பாளையம் கிராமத்தில் உலர்க்களம் வேண்டும் என்றும் வேண்டாம் என்றும் மாறி மாறி ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருதரப்பினர் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.