பருவமழை குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண் - ஆட்சியர் தகவல்
பருவமழை குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண் - 24 மணி நேரமும் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
By : King 24x7 Website
Update: 2023-12-04 17:16 GMT
பருவ மழையின் காரணமாக சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆறுகள், கண்மாய்கள், குளம், குட்டை ஆகிய நீர்நிலைகளில் தற்போது நீர்வரத்து தொடங்கியிருப்பதால், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருத்தல் மற்றும் நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்த்திடல் வேண்டும். மேலும், அரசின் அறிவுரைகளை முறையாக பின்பற்றாமல், சிலர் நீர்நிலைகளில் குளிக்கச் செல்வதும், அவர்களுடன் சிறுவர், சிறுமியரையும் அழைத்தும் செல்கின்றனர். அச்சமயம், எதிர்பாராத விதமாக, தவறி நீரில் மூழ்கி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இத்தகைய உயிரிழப்புகள் அனைவரையும் மனவேதனைக்கு உள்ளாக்குகின்றன. எனவே, ஆறுகள், கண்மாய்கள், குளம், குட்டை ஆகியவற்றில் மக்கள் குளிப்பதையும், துணி துவைப்பதையும், கால்நடைகளைக் குளிப்பாட்டுவதையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, நீர்நிலைகளுக்கு அருகில் குழந்தைகளை அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், மழையின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்துத் தெரிவிக்க ஏதுவாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டணமில்லா உதவி தொலைபேசி எண் 1077 மற்றும் 04575 - 246233 ஆகிய எண்கள் இயங்கி வருகின்றன. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடித்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.