தாரமங்கலம் அருகே இறந்தவர் உடலை எடுத்துசெல்ல வழிகேட்டு மறியல்
தாரமங்கலம் அருகே இறந்தவர் உடலை எடுத்து செல்ல வழி கேட்டு உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் 26வது வார்டுக்கு உட்பட்ட சின்னாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் இவர் உடல் நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அவரது உடலை துட்டம்பட்டி பைபாஸ் ரோட்டில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.
பின்னர் அந்த உடலை எடுத்துச் செல்லும் பாதை குறுகளாக இருப்பதால் அருகில் உள்ள அவரது உறவினர் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக உடலை எடுத்துச் செல்ல முடிவெடுத்தனர். ஆனால் உறவினர் ராமச்சந்திரன் அதற்கு அனுமதிக்காத நிலையில் இறந்தவரை எடுத்துச் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் சுமார் 50 மேற்பட்டோர் ஓமலூர் ஈரோடு செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த தாரமங்கலம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் சமாதானம் பேசி சமாதானப்படுத்திய பின்பு அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஓமலூர் ஈரோடு செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.